தமிழகத்தில் வீடு கட்டுபவர்களுக்கு அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்ட பிறகே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டுவசதி துறை செயலாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் அரசாணையில், கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளை வெளியிட்டது. அதில் மனைப் பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டன. அதில் மனைப் பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர 10% இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக ஒதுக்கப்பட்டு, அந்த இடத்தை உள்ளாட்சி அமைப்புக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
இது தவிர கூடுதலாக மொத்த பரப்பில் ஒரு சதவீத பகுதி பொது பயன்பாட்டுக்காக மற்றும் 0.5 சதவீத பகுதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மனைப்பிரிவுக்கான அனுமதி பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று கிரியேட் அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் படி அனுமதி கோரும் மனைப்பிரிவை, உரிய அதிகாரிகள் பார்வையிட்டு, சாலை, திறந்தவெளி பகுதி மற்றும் பொதுமக்கள் உபயோகத்துக்கான இடங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் திட்ட அனுமதி மற்றும் மனைப்பிரிவு வரைபடம் ஆகியவற்றுடன் தானம் வழங்கப்பட்டதற்கான அசல் ஆவணம் ஆகியவை உள்ளாட்சி அமைப்புக்கு வழங்கப்பட வேண்டும்.
சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியாக இருந்தால் திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் அசல் ஆவணம் ஆகியவற்றிற்கு கவுன்சிலின் ஒப்புதல் பெறவேண்டும். அதன்பிறகு தானமாக வழங்கப்பட்ட இடங்களை கையகப்படுத்த வேண்டும். இதர உள்ளாட்சி அமைப்புகளிலும் சம்மந்தப்பட்ட அமைப்புகளிடம் ஒப்புதல் பெறவேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.