மத்திய அரசு தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. கடந்த ஆண்டு இது தொடர்பாக தேர்தல் சட்டங்கள் திருத்தத்தில் திருத்தம் மேற்கொண்டது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் இதற்கான சிறப்பு திட்டம் ஒன்றை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் கமிஷன் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜி கூறியதாவது, வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிகொண்டு பதிவு செய்ய வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தேர்தல் சட்டங்கள் சட்டம் – 2021 அனுமதி அளிக்கிறது. மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது விருப்பத்தின் பேரிலானது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட படிவம் 6பி-ல் ஆதார் அங்கீகாரத்திற்காக வாக்காளர்களிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் ஆதார் விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை திரும்ப பெறுவதற்கு எந்த வசதியும் இல்லை. அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது முற்றிலும் விருப்பத்தின் பேரிலானது. அதனால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது” என அவர் தெரிவித்துள்ளார்.