தமிழகத்தில் ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு தண்ணீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பு கிடையாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட கோரிய மனுவை விசாரித்தது.அதில் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் விதிகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டிட ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு ஆணையிட்டது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு, தலைமையில் மறுபடியும் விசாரணைக்கு வந்தபோது, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பஞ்சாயத்து ராஜ் துறை, போன்றவரின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்றுள்ள கூட்டத்தில் மிகவும் ஆட்சேபகரமான மற்றும் வெள்ளம் வந்தால் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள், நீர் நிலைகள் ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு இனிமேல் தண்ணீர் இணைப்பும், மின் இணைப்பும் வழங்கப்படமாட்டாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் நீர் நிலைகளை பராமரிக்கும் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் உள்ள சர்வே எண்களை பதிவுத் துறைக்கு தெரிவித்து அந்த இடங்களை அரசு இடங்களாக கணக்கெடுத்து அவற்றின் மதிப்பை பூஜ்யம் என நிர்ணயிக்க வேண்டும். மேலும் அந்த இடங்களை யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணையை தசரா விடுமுறைக்குப் பின்னர் ஒத்தி வைத்துள்ளனர்.