யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ஆகிய சமூகவலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள் மற்றும் செய்திகளால் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுவதோடு, மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. சமூகவலைதளங்களில் பல பேர் தனியாக யூடியூப் சேனல்கள் துவங்கி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டைச் சீர்குலைக்கும் அடிப்படையிலும் சர்ச்சை கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால் தேவையில்லான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் நிலவுகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து 100க்கும் அதிகமான யூடியூப் சேனல்களானது முடக்கப்பட்டது. இவற்றில் ஏராளமான யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானிலிருந்து இயக்கப்பட்டவை ஆகும்.
எனினும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் பெறப்பட்டது. இந்நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளைப் பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கி அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.