கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் கொரோனா குறைந்த நிலையில், இந்த மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பாலச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். இதற்கிடையில் குரூப்-2 தேர்வு அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், தற்போது மார்ச் மாதத்தின் மத்தியில் குரூப்-4 தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஓஎம்ஆர் தாள்(சீட்) தேர்வில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், தேர்வுகளில் (2020- க்கு பின்) ஓஎம்ஆர் தாளின் மேல் பாகத்தில் எழுதும் சுயவிவரக் குறிப்புகள், தேர்வு அறையிலேயே பிரித்தெடுக்கப்படும். இதனால் ஓஎம்ஆர் தாள் யாருடையது என்பது கணினியை தவிர, வேறு யாருக்கும் தெரியாது. விடைத்தாள் கொண்டு செல்லும் வேன்களில் கேமரா பொருத்தப்படும்.மேலும் திருத்தும் பணியை கணினியே செய்யும் என்று தெரிவித்துள்ளார்.