சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசு பேருந்து ஒன்று பராமரிக்கப்படாத சாலை பள்ளத்தில் சிக்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி-திண்டுக்கல் தேசிய சாலையில் நெடுஞ்சாலையாக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கிராமப்புறங்களிலும் மாநில நெடுஞ்சாலையாக சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு 90 சதவீதம் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதிலும் குறிப்பாக மருதிப்பட்டியில் இருந்து கிருஷ்ணாபுரம் வரையிலும் அரசினம் பட்டியில் இருந்து சூரக்குடி வரையிலும் வேங்கை பட்டிலிருந்து பிரான்மலை வரையிலும் உள்ள பல சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் புதிதாக போடப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் கல், மண் சாலைகளின் இருபுறங்களிலும் முறையாக பராமரிக்காததினால் செப்பனிடாமல் விடுபட்டதால் நான்கு சக்கர வாகனத்தில் சாலையோரங்களில் ஒரு சக்கரம் இறங்கினால் சாலையிலிருந்து வாகனம் கவிழும் நிலை ஏற்படுகிறது.
மேலும் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலை பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. நேற்று முன்தினம் மருதிப்பட்டியில் இருந்து சூரக்குடி வழியாக மேலூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று மருதிப்பட்டியலில் இருந்து முறையூர் வழியாக செல்லும் சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக சாலையோரம் ஒதுங்கிய போது பஸ் பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். மேலும் இதுபோன்று நடக்காமல் தவிர்ப்பதற்காக சாலையை பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதிமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து அரசு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.