மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் சோதனைச்சாவடியில் பாதயாத்திரை வருபவர்கள், வாகன ஓட்டிகள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக வருபவர்களுக்கும், மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வழியாக செல்பவர்களுக்கும் கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடியில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தலின்படி இந்த சோதனை நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். இந்த முகாமில் மருத்துவர்கள் சிவனேசன், சத்யா, ஆய்வக நுட்பனர் ஜெயா, மருந்தாளுனர் நிஷாந்தி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கும், வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் சோதனைச்சாவடி வழியாக ஓட்டி வரும் வாகன ஓட்டிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. மேலும் அதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கொள்ளிடம் சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர் கருணாகரன், ஊழியர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.