பிரான்சில் ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனைத்து கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் நாலாவது கட்ட ஊரடங்கு வேண்டாம் என்றும் மே 3ம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் வரும் மே 3ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்றும் உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மே 19ஆம் தேதி முதல் உணவகங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், அத்தியாவசியமாக கடைகள் ஆகியவை திறக்கப்படும் என்றும் வரும் ஜூன் 9ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஹெல்த் பாஸ் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு 11 மணிக்கு ஒத்தி வைக்கப்படும் என்றும் ஆனால் இரவு நேர விடுதிகள் (கிளப்ஸ்)திறக்க அனுமதி அளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.