லண்டனில் ஊரடங்கு தளர்த்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் மீது போலிஸார் தடியடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே நடுநடுங்க வைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் வுகான் நகரில் தோன்றியது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். சில மாதங்களாக இதன் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் லண்டனில் வைரஸின் தாக்கம் குறையாததால் கடந்த ஒரு வருடமாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை இதன் காரணமாக மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதனை தொடர்ந்து லண்டன் மக்கள் சுதந்திரம் வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கினர். சமூக இடைவெளியின்றி முககவசம் அணியாமல் அணிவகுப்பு நடத்தி போராட்டம் மேற்கொண்டதால் காவல்துறையினர் மக்களிடம் போராட்டங்களை கைவிட அறிவுறுத்தியும் போராட்டக்காரர்கள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து தடையை மீறியதால் இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதுமட்டுமின்றி போராட்டக்காரர்கள் சுதந்திரம் வேண்டும் எனக் கூறிக்கொண்டு காவல் துறையினர் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கலவர ஹெல்மெட்டை அணிந்து வந்த காவல்துறையினர் போராட்டங்களை கைவிடுமாறு மீண்டும் எச்சரித்தனர். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் கேட்காததால் தடியடி நடத்திய காவல்துறையினர் சுமார் 33 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து துணை ஆணையர் லாரன்ஸ் டைலர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நம் நாட்டில் வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் மக்கள் பொது சுகாதாரத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இதுபோன்ற நேரத்தில் நடவடிக்கை எடுப்பது முக்கியம் என்பதால் அதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.