புதிதாக வாக்காளர் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் புகைப்பட அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அடையாள அட்டை புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு e-EPIC என்ற செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு முறை திருத்தம், தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 9,871 வாக்காளர்களும், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 10,447 வாக்காளர்களும், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 9,685 வாக்காளர்களும், சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 9,088 வாக்காளர்களும் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வாக்காளர்களுக்கு இந்திய தபால் துறையின் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தால், வாக்காளர்களின் வீட்டு முகவரிக்கு புகைப்பட அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படுகிறது. இதுகுறித்து விவரங்களை தெரிந்து கொள்வதற்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.