ஏடிஎம்களில், ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் யோனா கேஷ் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி கொண்டு வந்துள்ளது.
இந்தியா முழுவதும் மக்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து வரும் நிலையில் தற்போது எஸ்பிஐ வங்கி புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. அந்த திட்டம் என்னவென்றால் ஏடிஎம்களில், ஏடிஎம் கார்டு இல்லாமல் பண பரிவர்த்தனையை செயல்படுத்தும் யோனா கேஷ் திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வருவது ஆகும். ஒருவேளை நம்முடைய ஏடிஎம் கார்டு காணாமல் போனாலோ அல்லது பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் அடைந்தாலோ பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் மறுபடி கார்டு பெறுவதற்கு வங்கியில் விண்ணப்பித்து பணம் எடுப்பதற்கு வெகுநாட்கள் ஆகிவிடும்.
இந்நிலையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை நம்முடைய செல்போனுடன் இணைக்கும் யோனா கேஷ் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தி இருக்கிறது. தற்போது இந்த வசதி நாடு முழுவதும் உள்ள 16,500 ஏடிஎம்களில் செயல்பாட்டில் இருக்கிறது. முதலில் எஸ்பிஐ வங்கியின் இந்த யோனா கேஷ் செயலியை உங்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இந்த செயலிக்கு ஆறு இலக்க அடையாள எண் ஒன்று வழங்கப்படும். நமக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் செல்போனில் யோனா பதிவு எண்ணையும், பாஸ்வேர்டையும் பூர்த்தி செய்து தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதையடுத்து நாம் எடுக்கும் பணம் குறித்த தகவல்கள் நம்முடைய செல்போனுக்கு மெசேஜாக அனுப்பி வைக்கப்படும். இந்த சேவையை தற்போது பல லட்சம் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து இந்த யோனா கேஷ் திட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள எல்லா ஏடிஎம் மையங்களில் பயன்படுத்துவதற்கும், ஏடிஎம் கார்டு பயன்படுத்துவதை தவிர்க்கவும் பாரத ஸ்டேட் வங்கி முடிவெடுத்திருக்கிறது. மேலும் இதில் ஏராளமான பயனடையும் வசதிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.