தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில், உள்ள அவருடைய வீட்டிலிருந்து தினமும் தலைமை செயலகத்திற்கு சென்று வருவார். அவர் வேகமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவருடைய வாகனத்தின் முன்னும்,பின்னும் கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் எப்போதும் செல்வது வழக்கம். முதலமைச்சர் வாகனத்தில் செல்லும் நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். அவர் வாகனம் சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.
அதனால் மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க முதல்வரின் பாதுகாப்பு வாகனங்கள் 12லிருந்து 8 வாகனங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் நிறுத்தப்படுவது இனி நடைமுறையில் இருக்காது. இந்த முடிவை மக்களின் நலனுக்காக முதல்வர் எடுத்துள்ளார்.
ஏற்கனவே முதலமைச்சரின் வாகனம் செல்லும் வழி முழுவதும் பாதுகாப்புக்காக நிற்க வைக்கப்பட்டுள்ள பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் தனது பயணத்தின்போது பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் முதல்வர் வாகனத்துடன் மற்ற வாகனங்களும் (மக்களுடன் மக்களாக) சேர்ந்தே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.