சென்னையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் கிரீன் லைன், ப்ளூ லைன் என்ற 2 வழித்தடங்கள் இருக்கிறது. இந்த வழித்தடங்களை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிய வழித்தடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்காக ரெட் லைன், ஆரஞ்சு லைன் மற்றும் பர்பிள் லைன் போன்ற வழித் தடங்களை அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவடைந்தால் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சுலபமாக சென்று வர முடியும் என்று கூறப்படுகிறது.
அதன்படி ரெட் லைன், ஆரஞ்சு லைன் மற்றும் பர்பிள் லைன் பணிகள் முடிவடைந்தால் கோடம்பாக்கம், கலங்கரை விளக்கம், பூந்தமல்லி, புரசைவாக்கம், ராயப்பேட்டை, கிரீன்வேஸ் ரோடு, மாதவரம் மற்றும் அடையாறு போன்ற பகுதிகளுக்கு எளிதில் சென்று வரலாம். இதனயடுத்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு வழியாக கிரீன் லைன் வழித்தடத்தை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதேபோன்று ரெட் லைன் வழிதடத்தில் திருமங்கலம், கோயம்பேடு நூறடி சாலை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் வழியாக ரயில் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய பகுதியை தவிர்த்து, கோயம்பேடு மெட்ரோ ரயில் வழியாக ரெட் லைன் வழிதடத்தை அமைப்பதற்கு புதிய திட்டத்தை வகுத்துள்ளனர். அதன்படி ஒரே ரயில் நிலையத்தில் இரண்டு வழித்தடங்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலம் குறைந்த அளவில்தான் கையகப் படுத்தப்படும். அதன் பிறகு கோயம்பேடுக்கு வரும் பயணிகள் எளிதில் ஒரு ரயில் நிலையத்தில் இருந்து மற்றொரு ரயில் நிலையத்திற்கு மாறிக்கொள்ள முடியும்.
இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் பயன்பாட்டுக்கு வந்து விட்டால், கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளம்பாக்கத்திற்கு திருப்பி விடப்படும். இதன் மூலம் கோயம்பேடு பகுதியில் மெட்ரோ ரயில்களை இயக்குவது சுலபமாகிவிடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறுகிறது.
ஏனெனில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு தினசரி 8000 முதல் 9000 பயணிகள் வந்து செல்வதால், முக்கியமான மெட்ரோ ரயில் நிர்வாகமாக கோயம்பேடு திகழ்கிறது. மேலும் திருமங்கலம் பகுதியில் இருந்து அம்பத்தூர் வழியாக ஆவடி வரை ரயில் திட்டத்தை விரிவு படுத்துவதற்கும் ஆலோசனைகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கான தேவை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.