இந்தியாவில் இயங்கிவரும் ஸொமேட்டோ, ஹெவ்லெட்பேக்கர்டு மற்றும் நோவார்டிஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தந்தையர்க்கான 26 வார பெட்டர்னிட்டி விடுமுறையை அறிவித்துள்ள நிலையில், தற்போது பிரிட்டிஷ் பன்னாட்டு ஆல்கஹால் தயாரிப்பு நிறுவனமான `டியாஜியோ’வின் இந்தியக் கிளை, பாலின பேதமின்றி தனது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன்கூடிய 26 வார குழந்தை வளர்ப்பு விடுமுறையை வழங்கி அசத்தியுள்ளது.
இதற்கு முன் இதே நிறுவனம் அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப தன்னிடம் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 26 வார மகப்பேறு விடுமுறையை அளிக்க ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் கருவுறுதல், வாடகைத்தாய் அல்லது தத்தெடுத்தல் போன்ற வழிகளில் குழந்தையைப் பெற்றுக்கொண்ட தந்தையர்க்கு நான்கு வார விடுமுறையையும் அளித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தற்போது டியாஜியோ நிறுவனம் பாலின பேதமின்றி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.