சீனாவில் தற்போது பி எஃப் 7 வைரஸ் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் கொரோனா தொற்று பாதிப்பு எத்தனை பேருக்கு ஏற்படுகிறது, அதில் எத்தனை பேர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர் என்பது குறித்த உண்மையான தகவல்களை அரசு வெளியிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனை சேர்ந்த சுகாதார தரவு நிறுவனம் ‘ஏர் பினிட்டி’ கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சீனாவில் தினமும் ஏறத்தாழ 10 லட்சம் பேர் கொரோனா பாதிப்பு ஆளாகின்றனர் எனவும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் உயிரிழக்கின்றனர் எனவும் கூறியுள்ளது.
ஆனால் இது குறித்து சீன அரசாங்கம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இந்நிலையில் “இதுவரை தினசரி கொரோனா பாதிப்பை வெளியிட்டு வந்த சீனாவின் தேசிய சுகாதார மையம் இனி கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட மாட்டோம் என நேற்று அறிவித்துள்ளது”. அதே சமயம் கொரோனா பாதிப்பு விவரங்கள் இனி சீன நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தால் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து சீன அரசு தெரிவிக்கவில்லை.