கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த மாநில அரசு அண்மையில் வெளியிட்ட செய்திகுறிப்பில் “கோவா கடற்கரைகளை சுத்தமாக பராமரிக்கவும், பயணியர் பாதுகாப்பாக உணரவும் பல சட்ட விதிகளை நடைமுறைபடுத்த அரசு முடிவுசெய்துள்ளது. அந்த வகையில் கோவா கடற்ரைகளில் திறந்த வெளியில் சமைக்க மற்றும் வாகனங்களை ஓட்டுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் குப்பை போட்டாலோ, கண்ணாடி பாட்டில்களை உடைத்தாலோ கடும் அபராதமானது விதிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதனை தவிர்த்து சுற்றுலா பயணியருக்கு பல சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்களுக்கும் சில புது விதிகள் விதிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே நீர் நிலை விளையாட்டுக்களை நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய டிக்கெட்டுகளை அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் கவுன்டர்களில் மட்டுமே விநியோகிக்க வேண்டும். திறந்த வெளிகளில் டிக்கெட் விநியோகம் செய்ய அனுமதியில்லை. தெருவோர மற்றும் வண்டிக்கடை வியாபாரிகள், சுற்றுலா பயணியரின் நடமாட்டத்திற்கு தடையாக இருக்ககூடாது. சுற்றுலா பயணியரிடம் பணம் கேட்டு தொல்லை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் இந்த அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு ரூ. 5,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.