சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன.
அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் இன்று பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இரவு நேர பொதுமுடக்கம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் போக்குவரத்திற்கும், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்கும் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி வரை இந்த இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரவுநேர பணிகளுக்கு செல்பவர்களுக்காக பேருந்துகள், ஆட்டோ, மெட்ரொ, டாக்ஸிகள் மற்றும் பிற போக்குவரத்துகளும் தடையின்றி இயங்கும். அத்தியாவசிய பணிகளுக்கான வாகனங்களும் இயக்கப்படும். அவசியமற்ற பொருள்களை இரவு நேரங்களில் கொண்டு செல்வதற்கும், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியினுள் வாகனங்கள் செல்வதற்கும், மாநிலங்களுக்கு இடையே வாகனங்கள் செல்வதற்கும் தடை இல்லை. ஆனால் இ- பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.