மக்கள் நீதி மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மக்கள் நீதி மையம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயங்கள் சென்னை மாவட்டத்தை தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள், கிராமங்கள், வணிக நிறுவனங்கள், போக்குவரத்து சேவை, மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகையான 10 ரூபாய் நாணயங்களையும் செல்லும் எனவும் அவற்றை வாங்க மறுத்தாலோ, அரசு பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது இந்திய தண்டனைச் சட்டம் 12 4 a வின் படி குற்றமாகும்.
இதில் 3 வருடம் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இவற்றை எச்சரிக்கையாக மட்டுமில்லாமல் விரைவில் செயல்படுத்த வேண்டும். ஏனென்றால் சிறு, குறு, நடுத்தர, தெரிய வணிகத் தொழில் நிறுவனங்கள், பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸி மற்றும் போக்குவரத்து சேவைகள், மருத்துவம், குடிநீர், காய்கறி, பழங்கள், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளாகட்டும் அவர்களிடம் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து பரிவர்த்தனை செய்யும் போது அது ஒரு சங்கிலி தொடர்பு போல சேர்ந்து ஒவ்வொரு இடத்திலும் குறிப்பிட்ட அளவு நாணயங்களை தேங்கிவிடும்.
எனவே அவ்வாறு தேங்கும் நாணயங்களை சம்பந்தப்பட்டவர்கள் வங்கியில் பணப்பரிவர்த்தனை செய்ய செல்லும்போது கொண்டு செல்கின்றனர். ஆனால் அந்த வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் 10 ரூபாய் நாணயங்களை வங்கி காசாளர் எண்ணி வாங்கி மறுசுழற்சி அடிப்படையில் பரிவர்த்தனை செய்ய தயங்கி அதனை சம்பந்தப்பட்ட வங்கிகள் வாங்க மறுத்து வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர். மேலும் ஒரு சில வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்களை பணப்பரிவர்த்தனையின் போது பரிமாற்றம் செய்ய ஆயிரம் ரூபாய்க்கு 50 ரூபாய் வங்கி ஊழியர்கள் கமிஷன் கேட்பதாக ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.
எனவே வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தாலும் மேலிருந்து ஒவ்வொரு துறையாக அந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் சூழ்நிலை உருவாகி தற்போது அது செல்லாது என்கின்ற தவறான புரிதல் மக்கள் மத்தியில் நிலவ தொடங்கிவிட்டது. எனவே முதலில் அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களையும் வங்கிகள் எந்தவிதமான தடையின்றி வாங்கி பணப்பரிவர்த்தனை செய்தாலே தமிழக முழுவதும் நிலவும் இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
மேலும் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அனைத்து தனியார் வங்கிகளும் 10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனையின் போது தடை இன்றி வாங்க வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டால் இது பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். மேலும் இவற்றை வாங்க மறுக்கும் வங்கிகள் மற்றும் ஊழியர்கள் மீது மேலே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.