இருசக்கர வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்டங்களிலும் மறுபடியும் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துகளில் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும் தங்களை விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் ஹெல்மெட் கண்டிப்பாக அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என வாகன ஓட்டிகளை போலீசார் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன்பு எஸ்பி ஹரிகரன் பிரசாந்த் தலைமையில் போலீசார் ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்த போலீசார் அவர்களை சாலை அருகே நிறுத்தியுள்ளனர். அதன்பின் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிஹரன் பிரசாந்த் அறிவுரை வழங்கி இருக்கின்றார். இருசக்கர வாகனத்தில் வரும்போது ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொள்வது ஆபத்தானது.
மேலும் குடும்பத்துடன் செல்பவர்கள் மற்றும் இளைஞர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக ஹெல்மெட் போடாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்த வாகனஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இனி தினந்தோறும் போக்குவரத்து போலீசாரின் ஹெல்மெட் சோதனை தொடரும். அதனால் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.