தமிழக பள்ளிக்கல்வி துறை நிர்வாகத்தில் பெரும்மாற்றங்கள் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அனைத்து நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., தனியார் பள்ளிகளுக்கும், தனிஇயக்குனரகம் உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த அரசாணையில் “அனைத்து பிரிவுகளுக்கும் ஒரே மாவட்ட கல்வி அலுவலர் உள்ளதால், தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள உரிய நேரமில்லை. இதன் காரணமாக கல்வி கற்பித்தல் முறையை கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அலுவலர்களான சி.இ.ஓ.க்களுக்கும் அதிக வேலைப்பாடு உள்ளது. அவர்களாலும் தொடக்ககல்வி மாவட்ட நிர்வாகங்களை கண்காணிக்க இயலவில்லை.
கொரோனா வைரசுக்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதனை தக்கவைக்க தரமான கல்வி அவசியம் ஆகும். ஆகவே தொடக்ககல்விக்கு தனி டி.இ.ஓ., நியமிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி கமிஷனர் கடிதம் எழுதி இருக்கிறார். மாநிலம் முழுவதும் 5,159 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் உள்பட 42 ஆயிரத்து 500 பள்ளிகள் தொடக்க கல்வியின் கீழ் செயல்படுகிறது. இதன் நிர்வாகத்தை மேற்கொள்ள தற்போது உள்ள 836 வட்டார கல்வி அதிகாரிகளான, பி.இ.ஓ-க்களுடன் கூடுதலாக 15 பி.இ.ஓ., மற்றும் 279 உருது பள்ளி நிர்வாகத்துக்கு தனியாக 6 பி.இ.ஓ., நியமிக்க கமிஷனரகம் கடிதம் எழுதி இருக்கிறது. பள்ளிக்கல்வி மற்றும் தொடக்ககல்வி இயக்குனரகத்தின் கீழ் மொத்தம் 8,200 சுய நிதி பள்ளிகள் செயல்படுகிறது. அவை அனைத்தும் தனியார் பள்ளி இயக்குனரகம் உருவாக்கப்பட்டு, அதன் நிர்வாகத்தில் சேர்க்கப்படவுள்ளது.
மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆன எஸ்சிஇஆர்டி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனரகத்துக்கு, தலா 1 கூடுதல் இணை இயக்குனர் பதவி, தலா 1 துணை இயக்குனர் பதவி உருவாக்கப்பட்டு உள்ளது. சமக்ர சிக் ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகத்திலிருந்து 2 இணை இயக்குனர் பணியிடங்கள், தொடக்க கல்வி மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி.,க்கு மாற்றப்படுகிறது. 32 மாவட்ட கல்வி அலுவலர், 15 வட்டார கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான, 16 நேர்முக உதவியாளர், 86 கண்காணிப்பாளர்கள் பதவிகள், புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 152 டி.இ.ஓ.,க்களில் தொடக்ககல்விக்கு மட்டும் 58 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதியதாக நேரடிநியமனம் பெற்ற, டி.இ.ஓ.க்கள், தொடக்க கல்வி டி.இ.ஓ.க்களாக நியமிக்கப்படுகின்றனர்.
அவர்கள் 2 வருடங்கள் இந்த பணிகளை கவனிப்பர். அதன்பின் இடைநிலை கல்விக்கு மாற்றப்படுவர். தொடக்ககல்வி டி.இ.ஓ.,க்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை பள்ளிகள், இடைநிலை கல்வி டி.இ.ஓ.,க்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளி நிர்வாகங்களை கவனிப்பர். இதற்கிடையில் ஆசிரியர், பணியாளர் நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்குவர். ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகத்தை மட்டும் சென்னை சி.இ.ஓ., மற்றும் சென்னை மாவட்ட தொடக்ககல்வி டி.இ.ஓ., கவனிப்பர். தனியார் பள்ளி டி.இ.ஓ.,க்கள் அனைத்து சுயநிதி, பிளே ஸ்கூல்கள், நர்சரி, பிரைமரி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் ஆகிய அனைத்து பாடத்திட்ட சுயநிதி பள்ளிகளின் அங்கீகாரம், மாணவர்களிடம் கட்டண வசூல் பற்றிய கண்காணிப்பு, அடிப்படை கட்டமைப்பு குறித்த சான்றிதழ் ஆய்வுகளை கவனிப்பர்.
மாவட்ட சிஇஓ-க்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் நிர்வாகங்களை கவனிப்பர். அரசு உதவி பெறும் பள்ளிகளின் உயர், மேல்நிலை ஆசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதல்வழங்குவர். ஆசிரியர், பணியாளர்களின் நியமனம் மற்றும் மாவட்ட அளவில் இடம் மாறுதல் வழங்குவர். புது பதவிகளுக்கான நிர்வாக செலவை ஈடுகட்ட பள்ளிக்கல்வி கமிஷனரகத்திலிருந்து 31 பட்டதாரி ஆசிரியர் மற்றும் துணை ஆய்வாளர், 30 கூடுதல் சி.இ.ஓ.,க்கள், 31 இளநிலை உதவியாளர் மற்றும் 86 கண்காணிப்பாளர் பதவிக்கான இடங்கள், அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.