நோபல் பரிசு பெறுபவர்களுக்கு கொடுக்கும் தொகை உயர்த்தப் பட்டிருப்பதாக பவுண்டேஷன் தலைவர் தெரிவித்துள்ளார்
பொருளாதாரம், அறிவியல், அமைதி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு வருடந்தோறும் நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. அதோடு அவர்களுக்கு தொகை ஒன்றும் கையில் வழங்கப்படும். இந்த தொகையின் அளவு வெவ்வேறு காலகட்டங்களில் மாற்றப்படுகிறது. இந்நிலையில் இந்த வருடம் முதல் நோபல் பரிசு வாங்குபவர்களுக்கு அதிகமாக 1 மில்லியன் கிரவுன் கொடுக்கப்படும் என நோபல் பவுண்டேஷனின் தலைவர் கூறியுள்ளார்.
முன்பு இருந்ததைவிட மூலதனமும் செலவும் நிலையாக இருப்பதனால் பரிசுத்தொகையை அதிகமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக நோபல் பவுன்டேஷன் தலைவர் தெரிவித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு 1,50,000 பரிசு தொகை 1 மில்லியன் கிரவுனாக அதிகரிக்கப்பட்டது. அதன்பிறகு 90களில் 9 மில்லியன் கிரவுன் பரிசு தொகையை எட்டியது.
அதன்பிறகு 2000 ஆம் ஆண்டில் 10 மில்லியன் கிரவுனாக பரிசுத் தொகை அதிகரித்தது. ஆனால் 2008-09 ஆம் நிதியாண்டில் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கிய நோபெல் பவுண்டேஷன் பரிசுத்தொகையை 8 மில்லியனாக 2012 ஆம் ஆண்டு குறைத்தது. அதன்பிறகு 2014ஆம் ஆண்டு 9 மில்லியனாக மீண்டும் உயர்த்தப்பட்டது. தற்போது இவ்வருடம் 10 மில்லியன் கிரவுன் நோபல் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.