உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த வருடம் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அமெரிக்க மருத்துவ சங்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
அந்த ஆய்வில் பள்ளிகள் திறப்பு கொரோனா தொற்று சமூக பரவலுக்கு காரணம் என்ற ஆதாரங்கள் இல்லை என அமெரிக்க மருத்துவ சங்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளிகளில் சமூக இடைவெளி, முக கவசம் மற்றும் தொடுதல் இல்லாத வருகைப்பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டும் என்றும், 2021-22 கல்வியாண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.