சென்னை ஆலந்தூர் மடுவின்கரை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரின் மூத்த மகன் விஷ்வா. இவர் ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவர் நேற்று மாலை பள்ளி வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து படுக்கையறைக்கு சென்று அவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதைப்பார்த்த இவருடைய பாட்டி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்தபோது விஷ்வா மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார். இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி முடிந்து வரும் போது தன்னுடைய நண்பர்களிடம் நாளைக்கு பள்ளிக்கு வர மாட்டேன் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து பரங்கிமலை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. தற்கொலை என்பது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வாக முடியாது. பிரச்சனையை எதிர்கொள்ளும் தைரியத்தை மாணவர்கள் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.