தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் திரைப்படம் திரையிடல் திட்டம் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மாணவர்கள் பின்னாளில் தொழில் முறை கலைஞர்களாக வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கத்தில் பல்வேறு கலை செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து வருகின்றது.
அதன்படி அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் திரையிடல் திட்டம் -சீறார் திரைப்பட விழா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படுகிறது. காட்சி ஊடகம் மூலமாக உலகத்தை புதிய பார்வையில் மாணவர்களை காண வைப்பதும் வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.
மேலும் அனைத்து அரசு நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் வெளியிடப்படும். கதைக்களம், கதை மாந்தர்கள், உரையாடல்கள், கதை நடக்கும் இடம், ஒலிமற்றும் ஒட்டுமொத்த திரைப்படம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் ஸ்பாட்லைட் நிகழ்வு நடைபெறும். இதில் பதில் அளிக்கும் ஒவ்வொருவருக்கும், அணிக்கும் பரிசு வழங்கப்படும். இதில் பள்ளியளவில் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும் பின் மாவட்ட அளவில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது