பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான பாலியல் புகார்களுக்கான இலவச அழைப்பு எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அரசு மதரஸா ஐ அசாம் மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் பாடம் கற்பிக்கும் நிகழ்வை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் கல்வியாண்டில் அனைத்து பாடப் புத்தகங்களிலும், பாலியல் புகார் குறித்து தெரிவிக்க குழந்தைகளுக்கான உதவி எண்கள் இடம் பெறும் என தெரிவித்தார்.
இந்த ஆண்டு பொதுத் தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என கூறிய அன்பில் மகேஷ், மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக பாடத்திட்டம் 35% முதல் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.