தமிழகத்தில் சமீப காலமாக பிராங்க் வீடியோவால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக வயதானவர்கள், பெண்கள் என குறிவைத்து பிராங்க் வீடியோவை எடுத்து அவர்களது யூடியூப் பக்கத்தில் பதிவு செய்து பணம் சம்பாதித்து வருகின்றார்கள். இந்த சூழலில் கோவையில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள், நடை பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து குறும்புத்தனமான வீடியோக்கள் எனும் பெயரில் தங்களுக்கு என யூடியூப் சேனலை வைத்து அதில் வெளியிட்டு வருவது சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் அமைதியான சூழ்நிலையினை விரும்பி பூங்காக்களை நாடி வருபவர்கள் இடையேயும் நடை பயிற்சிக்காக மைதானங்களுக்கு வருபவர்களிடையும் வணிக வளாகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள் இடையேயும் மிகுந்த தாக்கத்தையும் அமைதியான சூழ்நிலைகளில் திடீர் பரபரப்பையும் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக இவ்வாறு எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோக்கள் youtube சேனல்கள் சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியும் இன்றி அவருக்கு தெரியாமலும் வெளியிடப்படுவதால் அவரது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் இந்த செயலானது அடிப்படை உரிமையான தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது.
இந்த நிலையில் கோவை மாநகரில் சமீப காலமாக பிராங்க் வீடியோ என்னும் பெயரில் வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் பற்றி பொதுமக்களிடையே அதிருப்தியும் புகார் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கோவை மாநகரில் யாரேனும் பிராங்க் வீடியோ எடுத்தல் என்னும் விதத்தில் பொதுமக்களிடம் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாகும் விதமாக நடந்து கொண்டாலோ அல்லது அது பற்றிய புகார் வரப்பட்டாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படுவது மட்டுமல்லாமல் அவரது வீடியோ சேனலும் முடக்கப்படும். மேலும் புகார் தெரிவிக்கப்பட்ட நபர்கள் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மட்டும் அல்லாமல் தகவல் தொழில்நுட்ப சட்ட முடித்த பிற சிறப்பு சட்டங்களின் கீழ் வழக்கு தொடரப்படும் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.