தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களில் 10 சதவீதத்தினர் மட்டுமே தலைக்கவசம் அணிந்து செல்வதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் கிராமங்கள் மற்றும் அதனையொட்டி உள்ள சிறு நகரப் பகுதிகளில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தலைக்கவசம் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரிடம் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். அதன் பின் தலைக்கவசம் வாங்கி வந்து காண்பித்த பின்னரே அவர்களிடம் வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வரும் போலீசாருக்கும் அபராதம் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.