உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதுமட்டுமல்லாமல் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் படங்கள் பதிக்கப்பட்ட உணவுப்பொருள் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி படங்கள் பதிக்கப்பட்ட உணவு பாக்கெட்டுகள் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்பட கூடாது என அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு பிறகு இது தொடர்பான உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவு பாதுகாப்பு ஆணையர் அனுப்பி வைத்தார்.