ராகவா லாரன்ஸ் தற்போது ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா போன்ற பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கின்ற நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகின்றார். இந்த சூழலில் ராகவா லாரன்ஸ் தனது வலைதள பக்கத்தில் அவருடைய உடலுக்காக அவர் எடுக்கும் முயற்சி மற்றும் அவர் இயக்கி வரும் அறக்கட்டளை பற்றியும் பதிவிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் வணக்கம் நான் இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அதாவது முதலாவதாக சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தை கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எனக்கு தேவை.
இரண்டாவது ஆக இத்தனை வருடங்களாக என்னுடைய அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி கூற விரும்புகின்றேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள் என்னால் இயன்றதை செய்திருக்கின்றேன் தேவைப்படும்போதெல்லாம் உங்களிடம் இருந்து உதவியை பெற்றிருக்கின்றேன். தற்போது நான் நல்ல இடத்தில் இருக்கின்றேன் மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகின்றேன். இனி மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்திருக்கின்றேன். அதனால் தனது அறக்கட்டளைக்கு உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் ஆசிர்வாதம் மட்டும் எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவிற்கும் அன்பிற்கும் நான் நன்றியுள்ளனாக இருப்பேன். மேலும் எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கின்றேன். அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் சேவையை கடவுள் அன்புடன் ராகவா லாரன்ஸ் என பதிவிட்டு இருக்கிறார்.