ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ரத்து செய்தால் சேவைக் கட்டணத்துடன் சேர்த்து ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரியையும் வசூலிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. ஏசி அல்லது முதல் வகுப்பு பயணிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தும் எனவும் மத்திய நிதித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கான ரயில் டிக்கெட்டுகள் ஒப்பந்த நிறுவனங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
பயணிகள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து ரத்து செய்தால், ஒப்பந்த நிறுவனங்களுக்காக சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது ஏசி அல்லது முதல் வகுப்பில் பயணிக்க முன்பதிவு செய்து ரத்து செய்தால் சேவைக் கட்டணத்துடன் 5 சதவிகித ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று விமானப் பயணம், தங்கும் விடுதிகள் போன்றவற்றின் முன்பதிவை ரத்து செய்தாலும், ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.