தமிழக சட்டப்பேரவையில் உணவுத் துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றிய அமைச்சர் சக்கரபாணி, தமிழக நியாயவிலை கடைகளில் இனி தானியங்கள் விற்பனை செய்யப்படும். நுகர்பொருள் வாணிப கழகம் 50 கோடியில் முழுமையாக கணினி மயமாக்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள், கேழ்வரகு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒரு குடும்ப அட்டைக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை காரணமாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது எனக் கூறினார். எனவே இந்த திட்டம் இரு மாவட்டங்களில் விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்