கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதை கட்டுப்படுத்த ஊரடங்கு பெரிதளவு பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அதில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து ஆங்காங்கே பொது மக்கள் கூட்டமாக கூட தொடங்கி விட்டனர். ஆனால் அந்தந்த மாவட்ட அதிகாரிகள் சார்பில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு அவ்வபோது அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கோயம்பேடு சந்தைக்கு அதிக அளவில் பொதுமக்கள் வருவதை தவிர்க்க ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்காக வாரம் ஒரு நாள் விடுமுறை விட வேண்டும் என சந்தை நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சந்தையை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்த பொதுமக்கள் காய்கறிகளை வாங்க குவிந்து வருவதால், இனி வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.