மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா மற்றும் வினய் துபே போன்றோரால் சென்ற ஆகஸ்ட் மாதம் “ஆகாசா ஏர்” விமான சேவை துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்தியாவில் வணிகரீதியான விமானங்களை இயக்கி வருகிறது. முதலாவதாக மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான விமானசேவையை வழங்கி வந்த இந்நிறுவனமானது இப்போது கூடுதல் வழித் தடங்களில் பயணிகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் பயணிகள் இனிமேல் தங்களது செல்லப் பிராணிகளுடன் விமானத்தில் பயணம் செய்ய ஆகாசா ஏர் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. பயணிகள் தங்களது செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்வதற்குரிய முன் பதிவு அக்டோபர் 15 முதல் துவங்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
அதன்பின் நவம்பர் 1 முதல் செல்லப் பிராணிகள் விமானத்தில் பயணம் செய்யலாம் என்று ஆகாசா தெரிவித்து உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய பயண அனுபவத்தை உருவாக்க, செல்லப் பிராணிகளுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக “ஆகாசா ஏர்” நிறுவனம் தன் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. 7 கிலோ வரை எடை உள்ள செல்லப் பிராணிகள் விமானத்தில் அனுமதிக்கப்படும். இதன் வாயிலாக செல்லப் பிராணிகளை விமானங்களில் அனுமதிக்கும் 2வது விமான நிறுவனமாக ஆகாசா ஏர் மாறி இருக்கிறது. இப்போதுவரை ஏர் இந்தியா நிறுவனம் மட்டுமே நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் போன்ற வீட்டு செல்லப் பிராணிகளை விமானத்தில் பயணம் செய்ய அனுமதியளித்து இருக்கிறது.