போலீஸ் ஏட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் காவல் நிலையத்தில் செல்வராஜ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்தோடு கவுல்பாளையத்தில் இருக்கும் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்று மனைவி இருந்துள்ளார். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மாலதி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த தம்பதிகளுக்கு சுபாஷினி என்ற மகளும், கருணாகரன் என்ற மகனும் இருக்கின்றனர்.
இந்நிலையில் செல்வராஜ் கருணாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த கருணாகரன் நான் இனி வீட்டிற்கு வரமாட்டேன் என கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்த சமயம் சுபாஷினி தூங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில் மகன் வீட்டை விட்டு வெளியேறியதால் மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து தூக்கத்திலிருந்து விழித்த சுபாஷினி தனது தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உடனடியாக செல்வராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.