தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மற்றும் மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் இணைந்து, பல்கலையிலுள்ள திருவள்ளுவர் இருக்கை சார்பாக திருக்குறள் பன்னாட்டு ஆய்வரங்கை நடத்தின. அப்போது தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பார்த்தசாரதி பேசினார். அதாவது, ஒவ்வொரு தனி மனிதரும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமும், அறமும் உடையவனாக இருக்கவும், நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் வழிகாட்டி நுாலாக திருக்குறள் திகழ்கிறது. இந்த சிறப்பு வாய்ந்த திருக்குறளை, தமிழர் மட்டுமின்றி வெளி நாட்டு மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.
இதற்கான பணியை பல்கலை செய்யும். இந்த பணிக்காக நானும், என் மனைவி மங்கையர்க்கரசியும் சேர்ந்து 1.50 லட்சம் ரூபாய் நிதியை திருவள்ளுவர் இருக்கைக்கு வழங்குகிறோம் என்று அவர் பேசினார். இதையடுத்து யாழ்ப்பாண கம்பன் கழக நிறுவனர் இலங்கை ஜெயராஜ் பேசியபோது, உலகத் தமிழர்கள் தலை நிமிர்ந்து நிற்கக்கூடிய ஒரு பெரும் சொத்தாக திருக்குறள் இருக்கிறது. நாம் அதன் உரிமையாளர்களாக இருப்பது பெருமைக்குரிய ஒன்று என கூறினார். இந்த நிகழ்வில் மயிலை திருவள்ளுவர் தமிழ்ச் சங்க நிறுவன செயலர் சேயோன், பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், வையாபுரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.