பணவீக்கத்தின் காரணமாக உணவுகளின் விலை உயர்த்த உணவகங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணவீக்கத்தின் அழுத்தம் காரணமாக ஒவ்வொரு துறையையும் பதம் பார்த்து வருகிறது. பணவீக்கத்தால் ஏற்கனவே பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் பொருட்கள் அல்லது சேவைகான விலையை உயர்த்தி வருகிறது. தற்போது உணவகங்களும் அந்த வரிசையில் இணைந்து விட்டன. உணவு பொருட்களின் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவகங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக உணவகங்களில் உணவுகளின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மெக்டோனல்ஸ், டாமினோஸ் போன்ற பெரு உணவக நிறுவனங்கள் சுமார் 15 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக உள்ளீட்டு பொருட்களின் விலை சுமார் 30% உயர்ந்துள்ளதால் உணவுகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக உணவகங்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமில்லாமல் சமையல் எண்ணெய், உணவுப்பொருள்கள், கேஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலை கடந்த மூன்று மாதங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உணவகங்கள் உணவு விலையை உயர்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். உணவகங்களில் சாப்பிடுவதற்கான செலவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கத்தால் பல பொருட்களின் விலை உயர்ந்து மக்களுக்கு தலைவலி கொடுத்து வரும் நிலையில், உணவகங்களிலும் விலை அதிகரித்துள்ளதால் பொது மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.