தமிழகத்தில் பாஜக மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து வருகிறது. திமுகவின் செயல்பாடு களுக்கு தொடர்ந்து டஃப் கொடுத்து வரும் பாஜக அடுத்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சும்மா பெயருக்காக இருக்கும் சில கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபடுகிறது. நம்முடைய நாட்டுக்காக பணியாற்றும் ராணுவ வீரருக்கு இங்குள்ள அரசியல் கட்சி வீடியோ வெளியிட்டு மிரட்டல் விடுகிறது.
அதில் உங்கள் குடும்பம் தமிழகத்தில் இருந்து இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் என்று கூறுகிறார்கள். ஆளுங்கட்சியின் கையில் சட்டம் ஒழுங்கு இருக்கிறது என்ற தைரியத்தில் தான் இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள். நான் பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். நாங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று வளர்ச்சித் திட்டங்கள் சரியான முறையில் சென்றடைந்துள்ளதா என்பதை ஆராய்ந்து ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கு முடிவு செய்துள்ளோம்.
தமிழகத்தில் பால் விலை உயர்வை கண்டித்து 1200 இடங்களில் போராட்டம் நடத்தினோம். இதேபோன்று அடுத்த முறை 5000 இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். திமுக அரசின் தவறுகளை தட்டிக் கேட்கும் மிகப்பெரிய கட்சியாக பாஜக இருக்கிறது. மேலும் திமுகவின் தவறுகளை மக்களின் குரலாக பாஜக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். ஆனால் திமுக தன்னுடைய தவறுகளை திருத்திக் கொள்ளாமல் மீண்டும் தவறான பாதையில் தான் நடந்து கொள்கிறது என்று கூறியுள்ளார்.