ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தற்போது சமையல் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சூழலில் உத்தரகாண்ட் அரசு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்துள்ளது. அது என்னவென்றால் ஒரு வருடத்திற்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பணம் செலுத்தாமல் 3 சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரகாண்ட் மாநிலத்தின் புஷ்கர் சிங் தாமி அரசு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஏழை குடும்பங்களுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியுள்ளனர். இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கு புஷ்கர் சிங் தாமியின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் அரசுக்கு இதனால் 55 கோடி கடன் சுமை ஏற்படும். எனினும் இந்த முடிவால் 1.84 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். உத்தரகாண்ட் அரசின் இந்த முடிவு ஏழை குடும்பங்களுக்கு செய்யும் துரோகம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி இருந்தது. இருப்பினும் மக்கள் ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுவதால் இந்த விஷயத்தை வரவேற்கின்றனர். மற்ற மாநிலங்களும் இந்த திட்டம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.