திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் தமிழக பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் பயணத்தை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் பயணம் மேற்கொள்ள உள்ள தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக பயண டிக்கெட்டை ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை தற்போது உள்ளது.
இந்நிலையில் திருப்பதிக்கு வருகை தரும் வெளிமாநில பக்தர்களின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் குறித்த விபரங்களை அவர்களுடைய பயணம் மேற்கொள்ளும் தினத்துக்கு ஏழு நாட்களுக்கு முன்பே தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் 15-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் தினசரி சுற்றுலா பயணத் திட்டத்தின் மூலம் திருப்பதி பயணம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பயணம் குறித்த விவரங்களை 7 நாட்களுக்கு முன் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப் படுவதாக தமிழ்நாடு சுற்றுலா கழகம் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடைமுறை வரும் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.