நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாகவே உயிர் இழப்புகள் அதிகமாக இருக்கின்றன. கொரோனா சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்ய வேண்டியது உள்ளது. இதற்கு மத்தியில் கொரோனாவால் மக்கள் கடுமையான நிதி நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவ செலவுகளுக்கு கூட பணமில்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற சூழலில் பிஎஃப் சந்தாதாரர்கள் பிஎஃப் பணத்தை எடுத்து செலவு செய்ய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அனுமதி அளித்தது.
இதையயடுத்து மருத்துவ சிகிச்சைகளுக்கு அதிகம் பேர் தங்களுடைய PF பணத்தை எடுத்து பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் PF வித்டிரா விதிமுறைகளை EPFO மாற்றியுள்ளது. அதன்படி PF வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். இதற்காக மருத்துவ செலவுகள் தொடர்பான ஆவணங்கள் எதையும் ஆதாரமாக வழங்க தேவை கிடையாது என்று கூறியுள்ளது.
இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும் சேமிப்பு பணத்தை பயன்படுத்துவதால் பிற்காலத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சேமிப்பு பணத்தை இப்போதே எடுப்பதால் அதன் வாயிலாக வட்டி குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே மருத்துவ செலவுகளுக்கு வேறு வழியே இல்லாத நிலையில் மட்டுமே எடுத்தால் நல்லது.