டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் பெருமாள் என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 47 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். கடும் குளிரை தாங்க முடியாமல் தற்போது வரை 70 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையில் பெருமாள் என்ற 68 வயதுடைய நபர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட 78 விவசாயிகள் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.