கேரளா மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் நேற்றைய நிலவரப்படி 1707 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் இதுவரை தடுப்பூசியை போடவில்லை என்று தெரியவருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி கூறியது, அரசு பள்ளிகளில் 2,00,000 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அனைவரும் கட்டாயமாக தடுப்பு செலுத்தி கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்களின் பட்டியல் மாவட்ட வாரியாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் விளக்கம் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு வாரத்திற்குள் அவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மருத்துவ காரணங்களால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலவில்லை என்றால் மத்திய அரசு அல்லது மாநில சுகாதார துறை அதிகாரிகள் வழக்கிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் வாரம் ஒருமுறை RT-PCR கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்கு ஆசிரியர்கள் உடன்படவில்லை என்றால் சம்பளம் இல்லாமல் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டிலேயே இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.