அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவசர நிலை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரானா வைரசால் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 8 கோடியை தாண்டியுள்ள நிலையில் 9.5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி அவசர நிலை முடிவுக்கு வர இருந்தது. ஆனால் அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் மேலும் அவசர நிலையை நீடித்து அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில். “அமெரிக்காவின் பொது சுகாதாரம் மற்றும் தேசத்தின் பாதுகாப்பை தொடர்ந்து கொரோனா வைரஸ் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனால் மார்ச் 1ஆம் தேதிக்கு பின்னரும் அவசரநிலை தொடரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.