பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் மின்சார வாகனங்களின் விலையானது அதிகமாகவே உள்ளது. இதனால் ஒரு சிலர் மட்டுமே இந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மின்சார கார்களின் விலை பெட்ரோல் கார்களின் விலையை போல குறைந்துவிடும் என்று மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்துள்ளார். நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக கூறிய அவர், சார்ஜிங் மையங்களுக்கான மின்சாரம் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி வாயிலாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.