தமிழக முதல்வர் பதற்றத்தில் உளறிக்கொண்டு இருப்பதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார சிறப்பு பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், மத்திய அரசு கொண்டுவர இருக்கக்கூடிய புதிய மின்சார சட்டத்தில் மின் உற்பத்தியை பெரும்பாலும் தனியாருக்கு கொடுக்க போறாங்க. காலப்போக்கில் மின் இணைப்புகளை தனியார் நிறுவனங்கள் தர கூடிய அளவிற்கு சூழ்நிலை வந்துரும். அப்படி செய்தால் இலவச மின்சாரம் தர மாட்டார்கள். விவசாயிகளுக்கு, கைத்தறி, விசைத்தறிக்கு மின்சார சலுகைகள் வரிசையாக பறிக்கப்படும்.
இது எதுவும் தெரிஞ்சுக்காம பொத்தம் பொதுவாக இலவச மின்சாரம் ரத்து ஆகாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. அவருக்கு என்ன… இன்னும் மூன்று மாதம் தான் இருக்கின்றது. அப்படி கூட உறுதியாக சொல்ல முடியாத அளவுக்கு பழனிச்சாமி நாற்காலி ஆடிக்கொண்டு இருக்கின்றது. பதவிக்காலம் முடிவதற்கு முன் அவருடைய நாற்காலியை கவிழ்க்க உள்ளுக்குள்ளேயே சில சதி நடந்து கொண்டிருப்பதாக எனக்கு தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.
அந்த பதற்றத்தை வெளியே காட்டாமல் இருக்கின்றார். நித்தமும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறார் பழனிச்சாமி. வேளாண் சட்டங்களை தினமும் விழுந்து விழுந்து ஆதரிக்க காரணம் அதுதான். எப்படியாவது பாஜக தலைமையின் கருணை நமக்கு கிடைக்காதா என்று தவம் இருக்கிறார் பழனிச்சாமி. அதனாலதான் எதையும் தாரைவார்க்க தயாராகிவிட்டார். அவருக்கு மக்கள் எந்த காலத்திலும் கருணை காட்ட மாட்டாங்க. அதைச் சொல்ல போகக்கூடிய தேர்தல்தான் அடுத்து நடக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தல் என முக.ஸ்டாலின் தெரிவித்தார்.