நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.இன்று ஒரே நாளில் 34,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஒமைக்ரான் பாதிப்பும் மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளாகியவரின் எண்ணிக்கை 65- ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தினம்தோறும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதால் அங்கு கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வகையில், பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 10 ,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் அடுத்த 3 வாரங்களில் கொரோனா உச்சம் தொடும் என்று சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர். இதுபற்றி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேசியதாவது, கேரளாவில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அடுத்த 3 வாரங்களில் இதன் வேகம் இன்னும் கூடுதலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாதிப்பு அதிகரிக்கும் நேரத்தில் மருத்துவமனைகளுக்கு வருபவரின் எண்ணிக்கையும் உயரும் என்று அவர் கூறியுள்ளார்.