Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இன்னும் 4 நாட்களே உள்ளது… தீவிரப்படுத்தப்பட்ட முன்னேற்பாடு பணிகள்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியில் முன்னேற்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது பல்வேறு கட்சியினர் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம், மின்னணு வாக்கு பெட்டி வைக்கும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி ஆகியவை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அழகப்பா பொறியியல் கல்லூரியின் வலதுபுறத்தில் திருப்பத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரமும், முதல் தளத்தில் இடதுபுறத்தில் திருப்பத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று காரைக்குடி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை கீழ் பகுதியிலும், காரைக்குடி தொகுதிக்கான மின்னணு வாக்குப் பெட்டி டிராயிங் கால் மேல் பகுதியிலும் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் மானாமதுரை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை முருகப்பா அரங்கின் கீழ்பகுதியில், வாக்கு எந்திரம் மேல் தளத்திலும் வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதிக்கான மின்னணு வாக்குப் பெட்டிகள் வைக்கும் இடம் மற்றும் அந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமாக அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தின் பார்வையாளர்கள் அமரும் இடம் என அதன் நடுவில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மின்னணு வாக்கு பெட்டிகள் வைக்கும் அறை கதவுகள், ஜன்னல்கள் வழியாக காற்று உள்ளே புகாத வண்ணம் பலகையால் சுற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது.

மேலும் வரிசையாக கட்டம் வரையப்பட்டு பதிவான மின்னணு பெட்டிகள் வைப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சுற்றிலும் தடுப்பு கட்டைகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தபால் ஓட்டுகள் வைப்பதற்காக முன்னேற்பாடு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்காக அழகப்பா பொறியியல் கல்லூரியின் முகப்பு பகுதியில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றது. அனைத்து பணிகளும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நிறைவு பெறும். இங்கு நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுசூதன் ரெட்டி மற்றும் வருவாய்த்துறையினர், தேர்தல் பார்வையாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Categories

Tech |