Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 4 மாதங்கள் பொறுங்கள்… முதுகெலும்புள்ள முதல்வர் வருவார்… திருச்சி சிவா எம்.பி பேச்சு ..!!

“லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட நிலையில், விவசாயமும் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகிறது” எனத் திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார்.

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

இந்த உண்ணவிரதப் போராட்டத்திற்கு தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ(எம்) சி.பி.ஐ, ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்கள் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், இந்த உண்ணாநிலை போராட்டத்தினை தொடங்கி வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பங்கேற்றுள்ள கட்சி நிர்வாகிகள் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், “நடுங்கும் குளிரில் போராட்டத்தை தொடர்ந்து வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறது. லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட நிலையில், விவசாயமும் தனியாரிடம் தாரை வார்க்கப்படுகிறது. இன்னும் 4 மாதங்கள் பொறுங்கள், முதுகெலும்புள்ள தலைவர் முதல்வராக வருவார். நீட், குடியுரிமை சட்டம், விவசாயம் என எதிரான சட்டங்கள் அனைத்தும் எதிர்க்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |