சென்னை புளியந்தோப்பு கேபி பார்க், பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அரசுக் குடியிருப்பில் 45 நாட்களுக்குள் மறுசீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் மீது புகார்கள் வந்துள்ளது. அதனால் இங்கு முதல் பகுதி குடியிருப்பான 112.16 கோடி ரூபாய் செலவில் 9 அடுக்குகளை 864 வீடுகளை கொண்டுள்ளது. மற்றொரு பிரிவில் 139.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1056 வீடுகள் இருக்கிறது.
புதிய வீடுகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று பயனாளிகள் தெரிவிக்கின்றனர். முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகள் கொரோனா தொற்று அதிகம் இருந்த காலத்தில் தற்காலிக சிகிச்சை மையமாக மாற்றப்பட்டிருந்தது. அதனால் நோயாளிகளுக்கு படுக்கைகள் போன்றவற்றை எடுத்து சென்றபோது குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறுகின்றனர். அவற்றைப் பார்வையிட வந்த எழும்பூர் தொகுதி எம்எல்ஏ. பரந்தாமனை சூழ்ந்து நின்று மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதையடுத்து குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் அமைச்சர்கள் தா மோ அன்பரசன் சேகர்பாபு போன்றோர் ஆய்வு நடத்தினர். ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று தெரிவித்த அமைச்சர் தா மோ. அன்பரசன் கட்டடத்தின் உறுதித்தன்மை பற்றி ஆய்வு செய்யும் பொறுப்பு ஐஐடி இடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வறிக்கையை வழங்கியதன் பின்னர் இதுபற்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இதன் பின்னர் அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் 45 நாட்களுக்குள் தொடர்புடைய கட்டுமான நிறுவனம் மறுபடியும் பூச்சு வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கழிவறைகளில் அமைக்கப்பட்டுள்ள பொருட்களை மாற்ற வேண்டும் என்றும், கட்டுமான நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இவற்றிற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்று தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்