அமெரிக்க உளவுத்துறை ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் இன்னும் 90 நாட்களில் தலைநகர் காபூலை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்களின் ஆதிக்கம் அந்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் ஆப்கானின் எல்லையோர மாகாணங்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் காரணமாக ஆப்கான் அரசு படைகள் தலிபான்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க உளவுத்துறை ஆப்கானின் தலைநகர் காபூலை தலிபான் பயங்கரவாதிகள் அடுத்த 30 நாட்களில் தனிமைப்படுத்தி, 90 நாட்களில் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த தகவல் குறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகள் தலிபான்களுக்கு பதிலடி கொடுக்கும் பட்சத்தில் அவர்களுடைய வேகத்தை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் 65 சதவீத பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் ஐரோப்பிய ஒன்றிய மூத்த அதிகாரி ஒருவர் 11 மாகாண தலைநகரங்களிலும் தலிபான்கள் முழு ஆதிக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையே தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் 8-வது மாகாண தலைநகரமாக பதக்ஷனில் உள்ள ஃபைசாபாத் நகரையும் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.